நாகை மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு 6 சட்டசபை தொகுதிகள் இருந்தன. தொகுதி சீரமைப்புக்குப்பின்னர் குத்தாலம் தொகுதி நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக புதிதாக கீழ்வேளூர் தொகுதி உருவாக்கப்பட்டது. ...
நாகை மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு 6 சட்டசபை தொகுதிகள் இருந்தன. தொகுதி சீரமைப்புக்குப்பின்னர் குத்தாலம் தொகுதி நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக புதிதாக கீழ்வேளூர் தொகுதி உருவாக்கப்பட்டது. தற்போது நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில்
சீர்காழி தொகுதி தனித்தொகுதியாகும். தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் சீர்காழி சட்டசபை தொகுதி 160-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தொகுதி காவிரி டெல்டா பகுதியில் கடைமடை பகுதியாக விளங்குகிறது. தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னர், சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 24 வார்டுகளை கொண்ட சீர்காழி நகராட்சி, 15 வார்டுகளை கொண்ட வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி, 37 ஊராட்சிகளை கொண்ட சீர்காழி ஊராட்சி ஒன்றியம், 42 ஊராட்சிகளை கொண்ட கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம், 9 ஊராட்சிகளை கொண்ட செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை உள்ளன. சீர்காழி தொகுதியில், தொகுதி மறுசீரமைப்பில் பூம்புகார் தொகுதியில் இருந்த காத்திருப்பு, நாங்கூர், திருவெண்காடு, மணிகிராமம், செம்பதனிருப்பு, 80 ராதாநல்லூர், ஆலவேலி, நத்தம், பாகசாலை, 75 கொண்டத்தூர், சேமங்கலம் ஆகிய 11 ஊராட்சிகள் இணைக்கப்பட்டன.
சீர்காழி சட்டமன்ற தொகுதியில் முக்கிய தொழிலாக விவசாயம் விளங்குகிறது. மறைந்த திரைப்பட பக்தி பாடகர் சீர்காழி கோவிந்தராஜன், உலக நூலக தந்தை என போற்றப்படும் எஸ்.ஆர்.ரெங்கநாதன், சீர்காழியில் பிறந்து வளர்ந்து உலகெங்கும் தமிழிசையை பரப்பிய தமிழிசை மூவர்களான அருணாச்சலகவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரும் சீர்காழி சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். சைவ சமய நெறிகளை பரப்பிய திருஞானசம்பந்தர் அவதரித்த சட்டைநாதர் கோவிலும் உள்ளது.
இதேபோல் நவக்கிரக ஸ்தலமான செவ்வாய் (அங்காரகன்) வைத்தீஸ்வரன்கோவில், புதன் ஸ்தலம் திருவெண்காடு உள்ளிட்ட கோவில்களும் உள்ளன.
சீர்காழி தொகுதியில் ஆதிதிராவிடர்கள் மற்றும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இதற்கு அடுத்தாற்போல் முஸ்லிம்கள், மீனவர், தேவர், யாதவர், செட்டியார் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்
எருக்கூர் நவீன அரிசி ஆலைக்கு ரூ.54 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம், சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் மகப்பேறு சிகிச்சைப்பிரிவு கட்டிடம், தென்னலக்குடி திருநகரி வாய்க்காலில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் தடுப்புச்சுவருடன் கூடிய ஷெட்டர், வைத்தீஸ்வரன்கோவில் பால் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுற்றுச்சுவர், பழையாறில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம், சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.- எம்.எல்.ஏ. சக்தி