ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இடம் பெற்று இருந்த பூந்தமல்லி, கடந்த 1977-ம் ஆண்டு பிரிக்கப்பட்டு பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியாக புதிதாக உதயமானது. 2011-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் பூந்தமல்லி...
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இடம் பெற்று இருந்த பூந்தமல்லி, கடந்த 1977-ம் ஆண்டு பிரிக்கப்பட்டு பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியாக புதிதாக உதயமானது. 2011-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்டிருந்த ஆவடி, பிரிக்கப்பட்டு புதிய தொகுதியாக உருவாக்கப்பட்டது. அதன்பிறகு பூந்தமல்லி தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
பூந்தமல்லி நகராட்சி, திருமழிசை பேரூராட்சி, பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட 28 ஊராட்சிகள், திருவள்ளூர் ஒன்றியம் மற்றும் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல ஊராட்சிகளும் பூந்தமல்லி தொகுதியில் இடம் பெற்று உள்ளன.
பூந்தமல்லி தொகுதியில் ஆதிதிராவிடர், முதலியார் ஆகியோர் சம அளவில் உள்ளனர். இது தவிர நாயக்கர், நாயுடு, செட்டியார், நாடார் உள்ளிட்ட இதர சாதியினரும் கணிசமாக வசித்து வருகின்றனர்.
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் மணிமாறனும், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.வி. மதியழகனும் போட்டியிட்டனர். இதில் அ.தி.முக. வேட்பாளர் மணிமாறன் வெற்றி பெற்றார்.
அந்த தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்கு விவரம் வருமாறு:-
மொத்த வாக்காளர்கள்:- 2,20,758
பதிவான வாக்குகள்:- 1,81,490
மணிமாறன்(அ.தி.மு.க.):- 99,097
ஜி.வி.மதியழகன்(காங்கிரஸ்):- 57,678
2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,20,758. தற்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3,09,084 ஆக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 88,326 உயர்ந்து உள்ளது.
பூந்தமல்லியில்தான் பொடா நீதிமன்றம் இருந்தது. தற்போது அங்கு இந்து முன்னணி தலைவர்கள் கொலை வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளிகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் என பல முக்கிய நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
பூந்தமல்லியில் திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப்பெருமாள் கோவிலும், நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான வைத்தீஸ்வரன் கோவிலும் உள்ளது. சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியும், அதில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் சுத்திகரிப்பு நிலையமும் இங்குதான் அமைந்து உள்ளது. பார்வையற்றோர்களுக்கான அரசு பள்ளியும் பூந்தமல்லியில் அமைந்து உள்ளது.
தமிழகத்தின் எந்த பகுதிக்கும் செல்லும் வகையில் கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் இடமாகவும் பூந்தமல்லி திகழ்கிறது. இங்கு ஏராளமான தனியார் கல்லூரிகளும், திருமழிசையில் தொழிற்பூங்காவும் உள்ளது. பூந்தமல்லி தொழில் நகரங்களை இணைக்கும் பகுதி என்று கூறலாம்.
2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்
பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது.
சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு இணைப்பு வண்டிகளும், காட்டுப்பாக்கம் ஊராட்சியில் நவீன எரிவாயு தகனமேடையும் அமைக்கப்பட்டு உள்ளது.
பூந்தமல்லி நகராட்சியில் நீண்ட நாள் பிரச்சினையாக இருந்து வந்த பனையாத்தம்மன் குட்டையில் கழிவு நீர் அதிகளவில் தேங்காத வகையில் தனியாக மின் மோட்டார் அறை அமைத்து கூவத்துக்கு எடுத்து செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- எம்.எல்.ஏ., மணிமாறன்